ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.;
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
லோக் அயுக்தாவில் புகார்
ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, மந்திரி முனிரத்னா மீது கமிஷன் புகார் கூறியுள்ளார். கர்நாடகத்தில் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் சங்கங்கள் உள்ளன. கெம்பண்ணா கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நாங்கள் டெண்டரில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளோம்.
முறைகேடு புகார்கள் இருந்தால் அதுகுறித்து லோக் அயுக்தாவில் புகார் தெரிவிக்கலாம். உரிய ஆதாரங்கள் இன்றி புகார் கூறினால் அதற்கு முக்கியத்துவம் இருக்காது. ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் மட்டுமே அதற்கு மதிப்பு உண்டு. பிரதமருக்கு கடிதம் எழுத அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் இங்கு ஊழல் குறித்து விசாரிக்க ஒரு அமைப்பு உள்ளது. அதுவும் லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் கிடைத்துள்ளது. அங்கு புகார் கொடுத்தால் முறைப்படி விசாரணை நடைபெறும்.
சித்தராமையா
அதை விட்டுவிட்டு சித்தராமையாவை கெம்பண்ணா நேரில் சந்தித்து பேசிவிட்டு கமிஷன் புகார் கூறியுள்ளார். இதில் இருந்து அவரின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.