மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது: குற்றவாளிகளை தப்பவிடமாட்டோம் -பிரதமர் மோடி உறுதி

மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை தப்பவிட மாட்டோம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

Update: 2023-07-21 00:27 GMT

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

100 பேர் பலி

அங்கு பெரும்பான்மையினரான 'மெய்தி' இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்குமாறு கோரி வருகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணிகள், கலவரமாக உருவெடுத்தன.

மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே வாரக்கணக்கில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கலவரத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது.

கலவரம் சற்று ஓய்ந்த நிலையில், கடந்த மே 4-ந் தேதி பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை பற்ற வைத்துள்ளது. மணிப்பூரில், ஒரு சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மற்றொரு சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்துச் செல்வதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

பிரதமர் கண்டனம்

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டம் நேற்று தொடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள், மனித இனத்துக்கே வெட்கக்கேடானவை. ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழுக்கு நேர்ந்துள்ளது. 140 கோடி இந்தியர்களும் வெட்கப்படுகிறார்கள்.

மணிப்பூர் மகள்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

இந்தியாவின் அந்தஸ்ைத உயர்த்தும்

அதே சமயத்தில், இந்த மழைக்கால கூட்டத்தொடரை எம்.பி.க்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள ேவண்டும். விவாதங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. சிறப்பாகவும், கூர்மையாகவும் நடத்தப்படும் விவாதங்கள், மக்கள் நலனில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

நமது இளைய தலைமுறை, டிஜிட்டல் உலகத்தை நடத்தி வரும் வேளையில், தரவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்படுவது, மக்களுக்கு நம்பிக்கை உணர்வை அளிக்கிறது. உலகத்தின் முன்பு இந்தியாவின் அந்தஸ்தை அதிகரிக்கிறது.

இந்த கூட்டத்ெதாடரில் தாக்கல் செய்யப்படும் தரவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள், மக்கள் நலனுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவை. ஆகவே, இக்கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்