யுபிஐ பண பரிவர்த்தனை சேவைக்கு கட்டணம் வசூலிப்பா? - மத்திய அரசு விளக்கம்
யுபிஐ பண பரிவர்த்தனை சேவைக்க்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது.
டெல்லி,
இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை , இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது. இதைப் பயன்படுத்த பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் யுபிஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, யுபிஐ சேவை விதியில் மாற்றத்தை கொண்டு வந்து யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வந்தது.
இது தொடர்பாக ஒவ்வொரு யுபிஐ பண பரிவர்த்தைக்கும் கட்டணம் வசூலிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பங்குதாரர்களிடம் கருத்து கோர உள்ளதாகவும் இது தொடர்பாக முன்மொழி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. யுபிஐ சேவையை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை சேவை தொடர்பாக நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.