'பப்', மதுபான விடுதிகளில் கன்னட பாடல்கள் ஒலிக்க தடை இல்லை-போலீஸ் கமிஷனர் தயானந்த் தகவல்
பெங்களூருவில் ‘பப்’, மதுபான விடுதிகளில் கன்னட பாடல்கள் ஒலிக்க எந்த தடையும் இல்லை என்று போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:-
எந்த தடையும் இல்லை
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள அரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், போலீஸ் கமிஷனர் தயானந்த் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நபர், பெங்களூருவில் பப், மதுபான விடுதிகளில் ஆங்கிலம், இந்தி பாடல்கள் மட்டுமே ஒலிக்கிறது. கன்னட பாடல்கள் ஒலிக்க வைக்கும்படி கூறினால், அதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லி விடுகின்றனர் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய போலீஸ் கமிஷனர் தயானந்த், பெங்களூருவில் பப், மதுபான விடுதிகளில் கன்னட பாடல்கள் ஒலிக்க எந்த விதமான தடையும் விதிக்கப்படவில்லை. கன்னட பாடல்கள் ஒலிக்க யாருடைய அனுமதியையும் பெற வேண்டிய தேவையில்லை, என்றார். மேலும் அவர் கூறியதாவது;-
ஆசிரியர்கள் விழிப்புணர்வு
பெங்களூருவில் நடைபாதைகளில் அறிவிப்பு பலகை, பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளது. நடைபாதைகளில் இருக்கும் தேவையில்லாத அறிவிப்பு பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல், வாகன ஓட்டிகளுக்கு தெரியும் விதமாக சிக்னல்கள் மற்றும் வழிகாட்டி பலகைகள் மாற்றப்படும்.
போதைப்பொருட்களை மாணவர்கள் பயன்படுத்துவதை தடுக்கும் விவகாரத்தில் ஆசிரியர்களின் பங்கும் உள்ளது. பள்ளிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆலோசனை கூட்டத்துக்கு அப்பகுதி போலீசாரை அழைத்தால், அவர்களும் வந்து போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.