நேர மேலாண்மை குறித்து கேள்வி எழுப்பிய மாணவர்: அம்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என பதில் அளித்த பிரதமர் மோடி..!
வாழ்க்கையில் குறுக்குவழிகளை நாம் ஒருபோதும் தேர்வு செய்யக்கூடாது, நம்மீது கவனம் செலுத்துங்கள் என்றார்.;
புதுடெல்லி,
கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி பரிக்ஷா இ சர்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து எவ்வாறு மீள்வது, மனஅழுத்தமின்றி தேர்வு எழுதுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார்.
இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பரிக்ஷா இ சார்ச்சா நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேர்வு பற்றி கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி நகைச்சுவையாகவும் சுவராஸ்யமாகவும் மாணவர்கள், மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு டக் டக் என்று பதில் அளித்து அசத்தினார்.
என்னுடைய தேர்வு முடிவுகள் சிறப்பாக இல்லாத போது எப்படி என் குடும்ப சூழலை சமாளிக்க வேண்டும் என்று ஒரு மாணவர் பிரதமரிடம் கேட்டார். அதற்கு பதலளித்த பிரதமர் மோடி,
குடும்பத்தில் எதிர்பார்ப்புகள் என்பது இயல்பானது தான். ஆனால் சமூக அந்தஸ்துக்காக அந்த எதிர்பார்ப்புகள் இருந்தால் ஆரோக்கியமானது அல்ல என்று கூறினார்.
என் வேலைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்குள் எப்படி முடிப்பது என்று ஒரு மாணவர் கேட்டதற்கு பதலளித்த மோடி,
நேர மேலாண்மை என்பது தேர்வுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் மிக அவசியமானது. உங்கள் அம்மா எப்படி நேரத்தை பயன்படுத்துகிறார் என்று கவனியுங்கள். அதிலிருந்து நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிடுவது என்பதை தெரிந்து கொள்ளமுடியும் அம்மாவின் நேரமேலாண்மை குறித்தும் மாணவர்களுக்கு தாய் பாசம் பற்றி எடுத்து கூறினார்.
தேர்வினால் வரும் மன அழுத்தத்தை எவ்வாறு தவிர்ப்பது என மதுரையை சேர்ந்து அஸ்வினி பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி,
முதல் பந்திலேயே அஸ்வினி என்னை அவுட்டாக்க பார்க்கிறார் என பிரதமர் மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
தேர்வில் மாணவர்களிடம் பெற்றோர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இயற்கையானது தான். எதிர்ப்பார்புகளை பற்றி மாணவர்கள் கவலைப்படமல் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு மதிப்பெண் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
சில மாணவர்கள் தேர்வில் ஏமாற்றுவதற்கு தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் தங்கள் நேரத்தையும் படைப்பாற்றலையும் நல்ல முறையில் பயன்படுத்தினால் வெற்றி கிட்டும். வாழ்க்கையில் குறுக்குவழிகளை நாம் ஒருபோதும் தேர்வு செய்யக்கூடாது, நம்மீது கவனம் செலுத்துங்கள் என்றார்.
இந்தியாவில் மக்கள் சராசரியாக 6 மணி நேரம் திரையில் செலவிடுகிறார்கள்.
இது கவலைக்குரிய விஷயமாகும். கடவுள் நமக்கு ஒரு சுதந்திரமான இடத்தையும், அபரிமிதமான ஆற்றலுடன் தனித்துவத்தையும் கொடுத்திருக்கும் போது, ஏன் கேளி நிழச்சிகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
விமர்சனத்திற்கும் தடைக்கும் இடையே மிக மெல்லிய கோடு உள்ளது. பெற்றோர்கள் ஆக்கபூர்வமான, நேர்மறையான வழியில் விமர்சிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பிரதமர் மோடியின் பதிலுக்கு மாணவ-மாணவிகள் கைத்தட்டி ரசித்தனர்.