தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை உடனே பயன்படுத்தும் திட்டம் இல்லைமத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு விளக்கம்

தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலுக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

Update: 2023-02-03 23:45 GMT

புதுடெல்லி, 

தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலுக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், சொந்த தொகுதிக்கு செல்லாமல், தாங்கள் பணியாற்றும் ஊரில் இருந்தபடியே வாக்களிக்க தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் இதுபற்றிய கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு:-

தேர்தல் கமிஷன் அளித்த தகவல்படி, தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலில் பயன்படுத்தும் திட்டம் இல்லை. மேலும், இது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பயன்பாட்டுக்கு கண்டுபிடிக்கப்படவில்லை. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு:-

20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரம் கிடைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் 208 வழக்குகள் 20 ஆண்டுகளாக உள்ளன. ஐகோர்ட்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 547 வழக்குகளும், மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்கோர்ட்டுகளில் 6 லட்சத்து 72 ஆயிரம் வழக்குகளும் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கூறியதாவது:-

உலகம் முழுவதும் உள்ள சிறைகளில் 8 ஆயிரத்து 343 இந்திய கைதிகள் உள்ளனர். அவர்களில் விசாரணை கைதிகளும் அடங்குவர். அதிகபட்சமாக, ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் 1,926 இந்திய கைதிகள் உள்ளனர்.

அவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் அளிக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

நாடாளுமன்ற நிலைக்குழு அதற்கு சிபாரிசு செய்துள்ளது. இருப்பினும், 2019-2020 நிதிஆண்டில் பயணிகள் கட்டணத்தில் மத்திய அரசு ரூ.59 ஆயிரத்து 837 கோடி மானியம் அளித்துள்ளது. இது, ரெயிலில் செல்லும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 53 சதவித சலுகை அளிக்கப்பட்டதற்கு சமம்.

அதுபோக, 4 வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள், மாணவர்கள் ஆகியோருக்கு சலுகை கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்