மல்லிகார்ஜுன கார்கேவுடன் சேர்த்து கர்நாடக காங்கிரஸ் கட்சியில் 3 கோஷ்டி உள்ளது; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி

மல்லிகார்ஜுன கார்கேவுடன் சேர்த்து கர்நாடக காங்கிரஸ் கட்சியில் 3 கோஷ்டி உள்ளது என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.;

Update: 2022-10-28 18:45 GMT

பெங்களூரு:

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வாரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டில் காங்கிரசுக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை என்ன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். நான் குஜராத்திற்கு 2 முறை சென்று வந்துள்ளேன். அங்கு காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்டதை பார்க்க முடிகிறது. நாட்டின் பிற பகுதிகளிலும் அக்கட்சி மறைந்து வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 கோஷ்டி இருந்தது. தற்போது மல்லிகார்ஜுன கார்கே கோஷ்டி உருவாகியுள்ளது. அக்கட்சி ஒரு வீடு மூன்று வாசல் என்ற நிலையில் உள்ளது. நாங்கள் இந்தி மொழியை திணிக்கவில்லை.

ரவீந்திரநாத் தாகூர் கூறியது போல் மொழி என்பது தாமரை பூவை போன்றது. அனைத்து மொழிகளும் தாமரை இலைகளை போன்றது. அதில் இந்தி இலை தாமரையின் மத்தியில் உள்ளது. இலைகள் இல்லாமல் தாமரை பூ ஆகாது. அதனால் இந்தி மொழி இலைகளுடன் கூடிய மொழி. சிலர் இந்தி திணிப்பு என்று கூறி ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்கள். ஒருபுறம் இந்தி மொழியை வளர்க்க விட மறுக்கிறார்கள். இன்னொரு புறம் கன்னடத்தையும் வளர்க்க விடாமல் தடுக்கிறார்கள்.

இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்