யுவராஜ் சிங் வீட்டில் பணம், நகை திருட்டு... காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் இருவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். இந்திய அணி 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம், ஒரே ஓவரில் 6 சிக்சர் என ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.
இவருக்கு சொந்தமான வீடு ஒன்று அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுலாவில் உள்ளது. அந்த வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ரூ.75,000 பணம், நகைகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சிங்கின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் விசாரிக்க நினைத்த யுவராஜ் சிங்கின் தாயார், எவ்வளவு முயற்சி செய்த போதிலும் எந்த தடயங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே 6 மாதங்கள் கழித்து தற்போது புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நகை, பொருட்கள் திருடுபோன விசயத்தில் வீட்டு பராமரிப்புப் பணியாளர், சகேதியைச் சேர்ந்த லலிதா தேவி மற்றும் பீகாரைச் சேர்ந்த சமையல்காரர் சில்தார் பால் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையின்போது திடீரென தங்கள் வேலையை முடித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.