கொரோனாவில் இருந்து உலகம் இன்னும் விடுபடவில்லை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற நிபுணர் அறிவுறுத்தல்

உலகம் கொரோனாவில் இருந்து இன்னும் விடுபடவில்லை என்றும் அதனால், முக கவசம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்படி மூத்த சுகாதார நிபுணர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

Update: 2023-03-23 15:47 GMT



குருகிராம்,


நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரம் எண்ணிக்கை வரை நெருங்கி உள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மூத்த அதிகாரிகளுடனான அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று மாலை நடந்தது. இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மரபணு பரிசோதனையை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

பிப்ரவரி மாதத்தின் 2-வது வாரத்தில் தினசரி 108 பாதிப்புகள் சராசரியாக பதிவாகின. இந்த எண்ணிக்கை தற்போது 966 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 7,600 ஆக உள்ளது. நாட்டில் 8 மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இதன்படி, மராட்டியம், குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழகம், டெல்லி, இமாசல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்தியாவில் தற்போது உலக அளவில் ஒப்பிடும்போது, 1% கொரோனா பாதிப்புகளே பதிவாகி வருகின்றன என அரசு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையின் இயக்குனரான டாக்டர் நரேஷ் திரேஹான் கூறும்போது, உலகம் கொரோனாவில் இருந்து இன்னும் விடுபடவில்லை. அதனால், தொற்றில் இருந்து விடுபட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நாம் திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 2, 3 மாதங்களாக கொரோனா முடிவுக்கு வர போகிறது என்பதுபோல் தெரிந்தது. நிறைய பாதிப்புகள் பதிவாகவில்லை. ஆனால், மக்கள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஒமைக்ரானுக்கான அதே பாதிப்புகளான தொண்டையில் பாதிப்பு மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் போன்றவை தென்பட்டன. விரைவில் அது முடிவுக்கு வராது என்பது எங்களது யூகம். காய்ச்சல் வடிவில் அது திரும்ப வந்து உள்ளது. அதன் பரவல் பெரிய அளவில் இருக்கும் என கூறியுள்ளார்.

முக கவசங்களை நாம் நிறுத்தி விடலாம் என முன்பு நினைத்தோம். ஆனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, முக கவசங்கள் அணியாமல் போக வேண்டாம். கொரோனா பரவலால், தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில், மீண்டும் பரவினால் நாம் அதிக விலை தர வேண்டியிருக்கும்.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பரவுவது என்பது பயணம் மேற்கொள்ளும் இன்றைய சூழலில் எளிது என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என அரசும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. நெருக்கடியான இடங்களில் மக்கள் கூட வேண்டாம். இருமல் ஏற்பட்டால் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்