தனிக்குடித்தனம் செல்ல மனைவி, உறவினர்கள் தொல்லை: கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தொல்லை கொடுத்ததால், கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதமும் போலீசாரிடம் சிக்கி உள்ளது.

Update: 2022-09-06 22:33 GMT

சிக்கமகளூரு: தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தொல்லை கொடுத்ததால், கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதமும் போலீசாரிடம் சிக்கி உள்ளது.

தனிக்குடித்தனம் செல்ல...

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜெயப்புரா அருகே லோகநாதபுரா கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 42). இவரது மனைவி ரேகா. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிைலயில், ரேகாவுக்கும் அவரது மாமியார்-மாமனாருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் ரேகா, தனது கணவர் அரவிந்திடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் இதற்கு அரவிந்த் மறுத்துள்ளார். தனிக்குடித்தனம் சென்றால் தனது தாயையும், தந்தையையும் யார் கவனித்து கொள்வது என்று மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன் மீது ரேகா ஜெயப்புரா போலீசிலும் புகார் அளித்திருந்தார். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் மனைவி, தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் மனமுடைந்த அரவிந்த், அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜெயப்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் அரவிந்தின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார், அரவிந்தின் மனைவி ரேகா மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். அப்போது, அரவிந்த் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

உருக்கமான கடிதம்

அந்த கடிதத்தில், மனைவி ரேகா, தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று என்னிடம் சண்டை போட்டு வருகிறார். அவரது தந்தை, அக்காள் ரஷ்மி, உறவினர்கள் அருண், ராமண்ணா, ராஜூ, வெங்கடேஷ் ஆகியோர் மூலம் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். நான் தனிக்குடித்தனம் சென்றுவிட்டால் எனது தாய், தந்தையை யார் கவனித்து கொள்வார்கள்.

என் மனைவி மற்றும் அவரது உறவினர்களின் தொந்தரவால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது சாவுக்கு மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தான் காரணம் என்று உருக்கமாக எழுதியிருந்தார். இதுகுறித்து ஜெயப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தின் மனைவி ரேகா உள்பட 7 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்