சபரிமலை கோயிலின் தங்கக்கூரையில் ஏற்பட்ட நீர்க் கசிவை சரி செய்யும் பணிகள் நிறைவு
சபரிமலை ஐயப்பன் கோயிலின் தங்கக்கூரையில் ஏற்பட்ட நீர்க் கசிவை சரி செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
திருவனந்தபுரம்,
கேரளாவின் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், 31 கிலோ தங்கம், ஆயிரத்து 900 கிலோ தாமிரம் கலந்து 24 ஆண்டுகளுக்கு முன் தங்கக்கூரை அமைக்கப்பட்டது.
தற்போது அந்த கூரையின் பல இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதை கண்டுபிடிப்பதற்கான சோதனை கடந்த மாதம் 3-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. வாஸ்து நிபுணரும், மூத்த ஸ்தபதியுமான ராஜு தலைமையிலான சிற்பிகள், நீர்க்கசிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, நீர்க்கசிவு முழுமையாக சரி செய்யப்பட்டது. பழுதடைந்த ஆணிகளுக்குப் பதிலாக புதிதாக 520 ஆணிகள் மாற்றப்பட்டுள்ளன. ஓணம் பண்டிகைக்காக, சபரிமலை கோயிலின் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 10-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.