கூட்டாளிகளின் உதவியுடன் கணவரை கொன்ற மனைவிக்கு வலைவீச்சு...!
கருத்து வேறுபாடு காரணமாக கூட்டாளிகளின் உதவியுடன் கணவரை கொன்ற மனைவியை வலைவீசி தேடி வருகின்றனர்.;
நாசிக்,
நாசிக், இந்திராநகரில் உள்ள வடலாகான் பகுதியை சேர்ந்தவர் திலீப் ரங்கநாத் கதம்(வயது54). மெக்கானிக்கான இவர், தனது 2-வது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இவரது வீடு பூட்டிக்கிடந்தது. நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு திலீப் ரங்கநாத் கதம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு ஆய்வு செய்தனர். அப்போது திலீப் ரங்கநாத் கதமின் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்ததுடன் வயிற்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன.
இதன்மூலம் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், திலீப் ரங்கநாத் கதமிற்கும், அவரது 2-வது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டதும். இதில் ஆத்திரமடைந்த மனைவி தனது கூட்டாளிகளின் உதவியுடன் அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான உள்ள திலீப் ரங்கநாத் கதமின் மனைவியை வலைவீசி தேடி வருகின்றனர்.