'பிறரைப் பற்றி விமர்சிக்கும் கெட்ட பழக்கம் மேற்குலக நாடுகளுக்கு உள்ளது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பிறரைப் பற்றி விமர்சிப்பது கடவுளால் கொடுக்கப்பட்ட உரிமை என மேற்கு நாடுகள் நினைப்பதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

Update: 2023-04-02 12:16 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. சார்பில் இளம் வாக்காளர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு வாக்காளர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவரிடம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் குறித்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்தது பற்றி கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த போது அவர் கூறியதாவது;-

"மேற்கு நாடுகள் நமது விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, பிறரைப் பற்றி விமர்சிக்கும் கெட்ட பழக்கம் மேற்குலக நாடுகளுக்கு உள்ளது. இது கடவுளால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை என நினைக்கிறார்கள். அவர்கள் இதை தொடர்ந்து செய்தால், பிற நாடுகளும் அவர்களை பற்றி விமர்சிக்க தொடங்குவார்கள். அப்படி நடந்தால் அதை மேற்குலக நாடுகள் விரும்புவதில்லை.

இரண்டாவதாக, நமது நாட்டில் நடக்கும் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க வெளிநாடுகளுக்கு நாமாகச் சென்று அழைப்பு விடுக்கக் கூடாது. இங்கிருந்து யாராவது ஒருவர் சென்று, ஏன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறீர்கள்? என்று அவர்களிடம் கேட்டால், அவர்கள் நிச்சயம் கருத்து தெரிவிக்க தான் செய்வார்கள்.

எனவே, பாதி பிரச்சினை அவர்களிடமும், பாதி பிரச்சினை நம்மிடமும் உள்ளது. இரு தரப்பிலுமே பிரச்சினை சரி செய்யப்பட வேண்டும்."

இவ்வாறு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்