வக்பு சட்ட திருத்த மசோதா; ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேச கட்சிகள் ஆதரவு

தெலுங்கு தேச கட்சியின் எம்.பி. ஹரீஷ் பாலயோகி, இந்த மசோதா நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

Update: 2024-08-08 10:49 GMT

புதுடெல்லி,

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துகளை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

எனினும், இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா பற்றிய மத்திய அரசின் விளக்கங்களை ஏற்கவும் மறுத்து விட்டன. இந்த திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்தன. இதனை தொடர்ந்து அவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேச கட்சிகள், வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

வக்பு வாரியத்தின் செயல்பாட்டில் வெளிப்படை தன்மையை கொண்டு வருவதற்காகவே இந்த சட்ட திருத்த மசோதாவின் நோக்கம் என்றும் மசூதிகளை நடத்துவதில் தலையிடுவதற்கான முயற்சி எதுவுமில்லை என்றும் அக்கட்சிகள் தெரிவித்து உள்ளன.

இதுபற்றி ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் மற்றும் மத்திய மந்திரியான ராஜீவ் ரஞ்சன் சிங் கூறும்போது, இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என கூறினார்.  உறுப்பினர்கள் பலரும், வக்பு வாரிய சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என கூறுகின்றனர். இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது.

ஒரு கோவிலுக்கும், அமைப்புக்கும் உங்களால் வித்தியாசப்படுத்திட முடியாதா? இது மசூதிகளில் தலையிடுவது இல்லை. இந்த சட்டம் அமைப்புக்கானது. அது வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதற்கானது என்றார்.

அவர் தொடர்ந்து, வக்பு வாரியம் எப்படி உருவானது? சட்டத்தின்படியே அது உருவாக்கப்பட்டது. சட்டத்தின் வழியே உருவாக்கப்படும் எந்தவோர் அமைப்பும் அதற்கு உட்பட வேண்டும். ஒரு சட்டம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என அதனை கொண்டு வருவது அரசின் உரிமை என்று கூறியுள்ளார்.

இதில், வகுப்புவாத பிரிவினை எதுவும் இல்லை. அவர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று எதிர்க்கட்சிகளை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த திருத்த மசோதா வரவேண்டும். வெளிப்படை தன்மையும் கொண்டு வரப்பட வேண்டும் என்றார். இதேபோன்று, தெலுங்கு தேச கட்சியின் எம்.பி.யான ஜி.எம். ஹரீஷ் பாலயோகியும், இந்த மசோதா நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்