ஷிண்டேவுக்கு வந்த கூட்டம், எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது பட்னாவிஸ் கருத்து
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பொதுக்கூட்டத்துக்கு வந்த கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுவதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அந்த கட்சியின் பாரம்பரியமான தசரா பொதுக்கூட்டம் வரலாற்றில் முதல் முறையாக 2 இடங்களில் நடந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் பொதுக்கூட்டம் தாதர் சிவாஜி பார்க்கிலும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் கூட்டம் பி.கே.சி. மைதானத்திலும் நடந்தது. 2 கூட்டங்களிலும் லட்சக்கணக்கில் அந்த கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுவதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புனேயில் அவர் கூறுகையில், "முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெருந்திரளான கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது.
நான் நாக்பூரில் 'தமாச்சார பிரவர்த்தன் தின்' கொண்டாட்டத்தில் இருந்ததால் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய 2 பேரின் பொதுக்கூட்ட பேச்சையும் கேட்கவில்லை. அதன்பிறகு யூ-டியூப்பில் ஏக்நாத் ஷிண்டே பேச்ைச கேட்டேன். உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு நான் எந்த கருத்தையும் கூற மாட்டேன். சிவாஜி பார்க்கைவிட 2 மடங்கு பெரிதான பி.கே.சி. மைதானத்தில் அதிகளவில் மக்கள் திரண்டு இருந்தனர். பி.கே.சி. மைதானம் முழுமையாக நிரம்பி இருந்தது.
ஷிண்டே சேனா தான் உண்மையான சிவசேனா என தொண்டர்கள் நிருபித்து உள்ளனர். அதற்காக நான் அவருக்கு வாழ்த்து கூற விரும்புகிறேன்" என்றார்.