காவலாளியை கத்தியால் வெட்டிய மர்மநபர்-போலீஸ் தீவிர விசாரணை

குடியிருப்பு பகுதியில் இரவில் சுற்றித்திரிந்தது பற்றி கேட்ட காவலாளியை மர்மநபர் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2023-06-21 18:45 GMT

பெங்களூரு:-

காவலாளிக்கு கத்தியால் வெட்டு

பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் எம்.எல்.ஏ. லே-அவுட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் ஆல்பர்ட் இருதயராஜன் என்பவர் காவலாளியாக உள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் லே-அவுட்டில் இரவு நேர பணியில் இருந்தார். அப்போது நள்ளிரவு சமயத்தில் அந்த பகுதியில் மர்மநபர் ஒருவர் சுற்றினார். அவரை அழைத்து ஆல்பர்ட் இருதயராஜன் விசாரித்தார்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் அவருடன் வாக்குவாதம் செய்தார். அந்த சமயத்தில் மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, காவலாளியின் முகத்தில் வெட்டினார். இதில் அவரது தாடைப்பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வலிதாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டார். அப்போது அந்த குடியிருப்பை சேர்ந்த சிலர் அங்கு ஓடிவந்தனர்.

வலைவீச்சு

ஆனால் அதற்குள் மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்றார். வெட்டு காயம் அடைந்த காவலாளியை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆர்.டி.நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காவலாளியிடம் விசாரித்தனர். அப்போது மர்மநபர், அடிக்கடி அந்த பகுதியில் சுற்றித்திரிவதாகவும், சம்பவத்தன்று இதுகுறித்து கேட்டபோது தன்னை தாக்கியதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆயுதத்தால் தாக்கிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்