இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் தோன்றிய பேராசிரியைக்கு ஏற்பட்ட முடிவு...!!

இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் தோன்றிய பல்கலை கழகத்தின் முன்னாள் பேராசிரியைக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-08-09 07:06 GMT

கொல்கத்தா,



மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரில் உள்ள செயிண்ட் சேவியர் பல்கலை கழகத்தில் படித்து வரும் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தனது மொபைல் போனில் உற்று பார்த்தபடி இருந்துள்ளார். இதனை அவரது தந்தை கவனித்து உள்ளார்.

அதிக நேரம் மொபைல் போனையே உற்று பார்த்த மகனின் அருகே சென்ற தந்தை அதில் இருந்த காட்சிகளை கண்டு அதிர்ந்துள்ளார். அதில், சமூக ஊடகத்தில் பெண்ணின் ஆபாச புகைப்படம் ஒன்றை அவரது மகன் பார்த்தபடி இருந்துள்ளார்.

விசாரித்ததில், அது மாணவரின் பேராசிரியை ஒருவரது புகைப்படம் என அறிந்து திடுக்கிட்டார். இதனை தொடர்ந்து அவர், பல்கலை கழகத்திற்கு தனிப்பட்ட முறையில் ஒரு புகார் கடிதம் அளித்துள்ளார். அதில், பல்கலைக்கழக பேராசிரியை ஒருவரின் ஆபாசம் நிறைந்த, நிர்வாணத்தின் உச்சம் தொடும் வகையிலான புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்த தனது மகனை கையும் களவும் ஆக பிடித்தேன்.

அந்த பேராசிரியை பாலியல் ரீதியாக தூண்டும் வகையில், உள்நோக்குடன் பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். ஆசிரியை ஒருவர் உள்ளாடை அணிந்தபடி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு பெற்றோராக, முற்றிலும் அதிர்ச்சி அடைந்தேன்.

இதுபோன்ற அருவருக்கத்தக்க விசயங்களில் இருந்து எனது மகனை பாதுகாக்க நான் முயன்றேன். ஆனால், ஒரு பொது தளத்தில், பிகினி போன்ற ஆடையில் தனது உடலை வெளிக்காட்டும் பேராசிரியையின் புகைப்படங்களை 18 வயது மாணவர் பார்க்க நேரிடுவது ஆபாசம் நிறைந்தது, முறையற்றது என தெரிவித்து உள்ளார்.

அந்த தந்தையின் பெயர் பி.கே. முகர்ஜி என மற்றொரு சமூக ஊடக பயன்பாட்டாளர் விவரங்களை வெளியிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அந்த பல்கலை கழகத்தின் துணை வேந்தர் மற்றும் பிற அதிகாரிகள் நடத்திய கூட்டத்திற்கு பேராசிரியை வரவழைக்கப்பட்டு உள்ளார்.

அவரிடம் அந்த கடிதம் மற்றும் பேராசிரியையின் இன்ஸ்டாகிராமில் இருந்த சில புகைப்படங்களை அளித்துள்ளனர்.

அதனை வாங்கிய அவர், இந்த புகைப்படங்கள் எப்படி பெறப்பட்டன என தன்னிடம் தெரிவிக்கப்படவில்லை. அல்லது அந்த புகைப்படங்களைத்தான் அந்த மாணவர் பார்த்து கொண்டிருக்கும்போது அவரது தந்தையால் பிடிபட்டாரா? என்பன போன்ற தகவல்களை தன்னிடம் தெரிவிக்கவில்லை என பேராசிரியை கூறியுள்ளார்.

இதனையடுத்து பல்கலை கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறேன் என கூறி என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டனர் என பேராசிரியை புகாராக கூறியுள்ளார். ஆனால், அந்த உதவி பேராசிரியை அவராகவே, விரும்பி விலகியுள்ளார் என பல்கலை கழகத்தின் தரப்பில் அவரது குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேராசிரியை அதனுடன் இல்லாமல், தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்க கூடும் என்றும் புகைப்படங்கள் அதன் வழியே கசிந்து, பரவி இருக்க கூடும் என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை பல்கலைக்கழகம் நீக்கிய விதம், பாலியல் துன்புறுத்தலுக்கு நிகரானது மற்றும் தனது நன்னடத்தையை அழிக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்