தொழுகையில் ஈடுபடுவது போன்று வெளியான வீடியோ பழமையானது

தத்தா குகை கோவிலில் சிலர் தொழுகையில் ஈடுபடுவது போன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள வீடியோ பழமையானது என்று சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.

Update: 2022-05-22 17:29 GMT

சிக்கமகளூரு:

பாபாபுடன்கிரி

சிக்கமகளூரு மாவட்டம் பாபாபுடன்கிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லிம்கள் சிலர் அசைவ உணவு சாப்பிட்டதாகவும், தொழுகையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர் ரமேஷ் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பழைய வீடியோ

தத்தா பீடத்தில் விவாதத்திற்குரிய எந்த ஒரு விதிமுறை மீறல்களும் நடக்கவில்லை. குறிப்பாக பீடத்தில் தொழுகை நடத்தியதாக கூறப்படும் வீடியோ மிகவும் பழமையானது. தற்போது அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் யாரோ மர்ம நபர்கள் பரவ விட்டுள்ளனர். அதன்மூலம் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர்.

கடந்த 2008-ம் சட்ட விதிமுறைகள் படியும், கோர்ட்டு உத்தரவின்படியும் தத்தா பீடத்தில் எந்தவொரு நபருக்கும் பிரார்த்தனை செய்ய அனுமதி இல்லை. அங்கு போலீசார் எப்போதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமைதி காக்க வேண்டும்

தத்தா பீடம் பகுதி யாருக்கு என கடந்த 1975-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கடந்த 1989-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவின்பேரில் அறநிலையத்துறை சார்பில் தத்தா பீடத்தில் வழிபடுவது தொடர்பாக ஒரு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது.

அதன்படியே அங்கு தற்போது வரை இந்துக்களும், முஸ்லிம்களும் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். ஆதாரமில்லாத சம்பவங்களை கையில் வைத்துக் கொண்டு யாரும் பிரச்சினையில் ஈடுபட வேண்டாம். இந்த விஷயத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்