வாலிபர் ஆபத்தான முறையில் பயணித்ததும் காரணம்

விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில், ஆபத்தான முறையில் வாலிபர் பயணித்ததும் காரணம் என ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-27 21:11 GMT

பெங்களூரு:-

படிக்கட்டில் பயணம்

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா முனவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாபு பதான்(வயது 20). இவர் கடந்த 2020-ம் ஆண்டு சரக்கு வாகனம் ஒன்றில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றார். அப்போது அந்த வாகனத்தில் தொழிலாளர்கள் பலர் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் சாலையில் மற்றொரு புறம் வந்த கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் இவர் சென்ற சரக்கு வாகனம் மீது மோதியது.

இதில் பாபு பதான் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மோட்டார் வாகன தீர்ப்பாயம் சார்பில் விபத்தில் உயிரிழந்த பாபு பதான் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்கி உத்தரவிடப்பட்டது. எனினும் இந்த தொகை போதாது என கூறி, அவரது குடும்பத்தினர் கர்நாடக ஐகோர்ட்டின் தார்வார் அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

ரூ.9 லட்சம்

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ரவி முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் அவர் பேசுகை யில், 'விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததற்கு, வாலிபரின் அலட்சியமும் காரணமாகும். அவர் விபத்தின்போது வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்துள்ளார்.

மேலும் அளவுக்கு அதிகமான பயணிகள் அதில் இருந்துள்ளனர். கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் டிரைவரின் அலட்சியமும் ஒரு காரணம் தான். ஆனால் விபத்தில், உயிரிழந்த வாலிபருக்கு 20 சதவீத பங்கு உள்ளது. எனவே முறைப்படி கே.எஸ்.ஆர்.டி.சி. வழங்க வேண்டிய ரூ.9 லட்சத்தில் ரூ.7.26 லட்சம் மட்டுமே வழங்கப்படும்' என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்