மராட்டியத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.6¾ கோடி நகை, பணம் சிக்கியது..!
மராட்டியத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.6¾ கோடி நகை, பணம் சிக்கியது.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூர் சீதாபுல்டி போலீஸ் நிலையத்தில் பங்கஜ் மெகடியா, லோகேஷ் ஜெயின், கார்திக் ஜெயின், பால்முகுந்த் லால்சந்த், பிரேம் லதா மெகடியாக ஆகிய 5 பேர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை அடிப்படையாக வைத்து 5 பேர் மீதும் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை தொடங்கினர்.
சமீபத்தில் அமலாக்கத்துறை மும்பை, நாக்பூர் உள்பட பங்கஜ் மெகடியா, லோகேஷ் ஜெயின், கார்திக் ஜெயின் ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்பட 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது கட்டு கட்டாக பணம், நகை குவியல் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனையில் ரூ.5.51 கோடி மதிப்பிலான தங்க, வைரம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் ரூ.1.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 72 லட்சம் ஆகும்.