கர்நாடக சட்டசபையில் மதமாற்ற தடை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக சட்டசபையில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-21 18:45 GMT

பெங்களூரு:

மதமாற்ற தடை மசோதா

கர்நாடக அரசின் போலீஸ் துறை கர்நாடக மத சுதந்திர பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெலகாவியில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதே கூட்டத்தொடரில் மேல்-சபையில் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து கர்நாடக அரசு, அதே அம்சங்களுடன் அவசர சட்டம் பிறப்பித்தது. தற்போது அந்த அவசர சட்டம் அமலில் உள்ளது. சிறிய திருத்தங்களுடன் அந்த மசோதா மேல்-சபையில் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து அந்த மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா நேற்று கர்நாடக சட்டசபையில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டி.காதர் பேசும்போது, "இந்த மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது அரசியல் உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றால் அது ரத்து செய்யப்படும்" என்றார். காங்கிரசின் மற்ற உறுப்பினர்களும் அந்த மசோதாவுக்கு எதிராக பேசினர்.

10 ஆண்டுகள் சிறை

அதற்கு பதிலளித்த மந்திரி அரக ஞானேந்திரா, "இந்த மசோதாவை தவறாக பயன்படுத்த முடியாது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இது மத சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே 8 மாநிலங்களில் இத்தகைய சட்டம் அமலில் உள்ளது. கர்நாடகம் 9-வது மாநிலமாக இந்த சட்டத்தை கொண்டு வருகிறது" என்றார். இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த எதிர்ப்புக்கு இடையே அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டப்படி தவறு செய்கிறவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டால் தவறு செய்கிறவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டாக மதமாற்றம் செய்தால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த மசோதா 2 சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு இருப்பதால், அதற்கு கவர்னர் அனுமதி வழங்கியவுடன் அது சட்ட வடிவம் பெற்று அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்