வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு..!
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயித்து வருகின்றனர்.
வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன.
அந்த வகையில் சென்னையில் இன்று முதல், ரூ.2,045-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டு, ரூ.2,009.50 என்று நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று முதல், வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் ரூ.1,885க்கு பதிலாக ரூ.25.50 குறைத்து ரூ.1,859க்கு விற்பனை செய்யப்படும்.
எனினும், வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை.ஜூலை 6-ம் தேதி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை யூனிட்டுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.