குளம் நிரம்பி விளைநிலத்தில் புகுந்த தண்ணீரை வெளியேற்ற வேண்டும்
சென்னகிரி அருகே குளம் நிரம்பி விளைநிலத்தில் புகுந்து தண்ணீரை வெளியேற்றவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிக்கமகளூரு:
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த தொடர் கனமழை காரணமாக, சூளேகெரே குளம் நிரம்பி மறுகால் செல்கிறது. இதனால், அந்த தண்ணீர் குளத்தையொட்டி உள்ள விளைநிலங்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசமாகி உள்ளன.மேலும் பாக்கு தோட்டத்திலும் தண்ணீர் புகுந்து குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விளைநிலத்தில் புகுந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.