சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி ஒரு மணிநேரம் தேடிய போலீசார்

பெங்களூருவில் சாக்கடை கால்வாய்க்குள் 30 பேர் சிக்கி இருப்பதாக வந்த புகாரால் சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி ஒரு மணிநேரம் போலீசார் தேடி போது யாரும் இல்லை என தெரிந்தது. மனநலம் பாதித்தவரால் போலீஸ்காரர்கள் நொந்து போன சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-01-08 18:45 GMT

பெங்களூரு:-

கால்வாய்க்குள் 30 பேர் இருப்பதாக...

பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே எம்.இ.இ. சிக்னல் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து திடீரென்று ஒரு நபர் வெளியே வந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த நபரிடம், எதற்காக சாக்கடை கால்வாய்க்குள் இருந்து வெளியே வந்தீர்கள் என அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர். உடனே அந்த நபர், ஸ்ரீராமபுரத்தில் இருந்து சாக்கடை கால்வாய் வழியாக இங்கு வந்து சேர்ந்தேன், என்னை போல் இன்னும் 30 பேர் சாக்கடை கால்வாய் வழியாக வருகின்றனர், என்று கூறினார்.

இதை கேட்ட மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தார்கள். அத்துடன் 30 பேர் சாக்கடை கால்வாய்க்குள் சிக்கி இருக்கலாம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இதுபற்றி உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு படைவீரர்களும் விரைந்து வந்தார்கள்.

நொந்து போன போலீசார்

பின்னர் சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி யாரும் சிக்கி உள்ளார்களா? என தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரம் தேடியும் சாக்கடை கால்வாய்க்குள் யாரும் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தார்கள். அதே நேரத்தில் சாக்கடை கால்வாய்க்குள் இருந்து வந்த நபரை, குளிக்க வைத்ததுடன், அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். அதன்பிறகு, அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது நான் ராக்கெட் மூலமாக சாக்கடை கால்வாய்க்குள் சென்று வெளியே வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறிய பதிலை கேட்ட பின்பு, போலீசார் நொந்து போனார்கள். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதையும் உறுதி செய்தார்கள். மேலும் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ராஜு என்றும் தெரிந்தது. அவரது குடும்பத்தை பற்றிய எந்த தகவலும் தெரியாததால், ஆர்.எம்.சி.யார்டு போலீசார், ராஜுவை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மனநலம் பாதித்தவர் என்று தெரியாமல், அவர் கூறியதை நம்பி சாக்கடை கால்வாய்க்குள் 30 பேரை போலீசார் தேடி சோர்ந்து போனார்களே தவிர, எந்த பயனும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்