ஹர்ஷாவின் குடும்பத்தினரிடம் இருந்து போலீசாருக்கு எந்தவித புகாரும் வரவில்லை; போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் பேட்டி

மர்ம நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படும் நிலையில் ஹர்ஷாவின் குடும்பத்தினரிடம் இருந்து போலீசாருக்கு எந்தவித புகாரும் வரவில்லை என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் கூறினார்.

Update: 2022-10-28 19:00 GMT

சிவமொக்கா;


பஜ்ரங்தள தொண்டர்

சிவமொக்கா (மாவட்டம்) சீகேஹட்டி பகுதியில் வசித்து வந்தவர் ஹர்ஷா. பஜ்ரங்தள தொண்டரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது.

இதனால் சிவமொக்காவில் பதற்றம் ஏற்பட்டது. 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கைதானவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரித்து வருகிறார்கள்.

வாய்மொழியாகவோ...

இந்த நிலையில் ஹர்ஷாவின் குடும்பத்தினருக்கு மர்ம நபர்களால் கொலை மிரட்டல் வந்ததாக புகார்கள் எழுந்தன. ஹர்ஷாவின் சகோதரி அஸ்வினி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதை பகிரங்கமாக தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மர்ம நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக ஹர்ஷாவின் சகோதரி அஸ்வினியிடம் இருந்தோ அல்லது அவரது குடும்பத்தினரிடம் இருந்தோ இதுவரையில் போலீசாருக்கு எந்தவித புகாரும் வரவில்லை. வாய்மொழியாகவோ அல்லது எழுத்து பூர்வமாகவோ கூட புகார் அளிக்கலாம். ஆனால் இதுவரையில் எந்த வகையிலும் போலீசாருக்கு புகார் வரவில்லை.

சைபர் கிரைம் மூலம்...

இருப்பினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஹர்ஷாவின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மர்ம நபர்களிடம் இருந்து செல்போன் மூலமாக கொலை மிரட்டல் வந்ததாக ஹர்ஷாவின் சகோதரி அஸ்வினி தெரிவித்ததாக எங்களுக்கு(போலீசாருக்கு) தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சைபர் கிரைம் மூலம் இதுபற்றி விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்