குஜராத் மாநிலத்தில் அனைத்து சிறைகளிலும் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்திய போலீசார்
குஜராத் மாநிலத்தில் அனைத்து சிறைகளிலும் போலீசார் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்திய நிலையில் உள்துறை மந்திரி உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்.;
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறைகளில் போலீசார் நேற்று நள்ளிரவில் திடீரென அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். அனைத்து சிறைகளிலும், சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றனவா? மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பு உள்ளனவா? என்பதற்காக சோதனை நடந்தது.
இதற்காக நள்ளிரவில் 1,700 போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதன்படி, மாவட்ட சிறைகள், சப்-ஜெயில்கள் மற்றும் சிறப்பு சிறைகள் உள்பட குஜராத்தின் 17 சிறைகளில் இந்த சோதனை நடந்தது.
குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்வி மற்றும் மூத்த போலீசார் கண்காணிப்பின் கீழ் இந்த அதிரடி சோதனை நடந்தது. போலீஸ் பவனில் இருந்தபடி, இந்த நடவடிக்கைகளை அவர்கள் கண்காணித்தனர். இந்த சோதனை இன்று காலை வரை நீடித்தது.
இதில், சில மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. எனினும், விரிவான அறிக்கை பின்னர் தெரிய வரும் என்று குஜராத் டி.ஜி.பி. விகாஸ் சஹாய் கூறியுள்ளார்.
இதனை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தில் காந்திநகரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்வி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில், பல விசயங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.