அன்று சாந்திநகர்... இன்று பையப்பனஹள்ளி...!!! தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழக மக்கள்

பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து தமிழக அரசு பஸ்கள் சாந்திநகருக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது தமிழகம் செல்லும் ரெயிலை பையப்பனஹள்ளிக்கு மாற்றியுள்ளனர். இதனால் தமிழக மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தீர்வு கிடைக்குமா என்று கேள்வி குறியாகி உள்ளது.

Update: 2022-09-30 18:45 GMT

பெங்களூரு:

2014-ம் ஆண்டு ரெயில் இயக்கம்

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கன்னடர்கள் மட்டும் இன்றி தமிழா்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், வடமாநிலங்களை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். ஆனால் பெங்களூருவில் வசிப்பவர்களில் 40 சதவீதம் பேர் தமிழர்கள் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக ஸ்ரீராமபுரம், கே.பி.அக்ரஹாரா, மாகடி ரோடு உள்ளிட்ட பகுதிகள் தமிழர்கள் வாழும் பகுதியாகவே உள்ளது. இங்கு வசிக்கும் தமிழக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த மக்கள் மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலை மட்டுமே நம்பி இருந்தனர். இதையடுத்து பெங்களூருவில் வசிக்கும் தமிழக தென் மாவட்ட தமிழர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி சிட்டி ரெயில் (கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா) நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது.

இன்றுடன் விடை பெறுகிறது

பெங்களூருவில் இருந்து இந்த ரெயில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலையிலேயே நாகர்கோவிலை சென்றடையும். இது சிட்டி ரெயில் நிலையத்தை சுற்றி இருக்கும் ஸ்ரீராமபுரம், கே.பி.அக்ரஹாரா, மாகடி ரோட்டில் வசிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. இந்த நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

அதாவது இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியுடன் சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தனது கடைசி பயணத்தை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறைவு செய்து, விடை பெற இருக்கிறது. இது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதேபோன்ற ஒரு நிலைமை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு பஸ் விவகாரத்திலும் அரங்கேறி இருந்தது. ஆம், பெங்களூருவின் மைய பகுதியான மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதன்மூலமாக தமிழக மக்கள் எளிதில் தமிழக அரசு பஸ்களில் செல்லும் வசதி இருந்தது.

தமிழக பஸ்கள் சாந்திநகருக்கு...

ஆனால் கடந்த 2007-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாளுக்கு முன்பாகவே மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து லால்பாக் அருகே உள்ள சாந்திநகருக்கு தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாற்றப்பட்டது. இது பெங்களூரு நகரில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு அப்போது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. கடந்த 2007- ம் ஆண்டில் இருந்து 15 ஆண்டுகளாக பெங்களூருவில் வசிக்கும் தமிழக மக்கள் சாந்திநகருக்கு சென்று தான் பஸ்களில் ஏறி செல்ல வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

ஆனால் சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டதால், அந்த ரெயில்களில் பயணிக்க தமிழர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

15 ஆண்டுகளாக இயக்கம்

இதன்காரணமாக தமிழக அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைய தொடங்கியது. சாந்திநகரில் இருந்தே கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்களும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு வரும் கர்நாடக அரசு பஸ்கள், சாந்திநகருக்கு பதிலாக பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு செல்லும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இருந்து வருபவர்கள் கர்நாடக அரசு பஸ்களில் வருவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

தமிழக அரசு விரைவு பஸ்கள் கடந்த 15 ஆண்டுகளாக சாந்திநகரில் இருந்து புறப்பட்டு, அங்கேயே பயணிகளை வந்து இறக்கி விடும் நிலையே உள்ளது. அதே நேரத்தில் சாந்திநகருக்கு தமிழக பஸ்கள் மாற்றப்பட்டாலும், அங்கு தமிழக அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்குவதற்காக போதிய வசதிகளை கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. தமிழக அரசு பஸ்கள் மீண்டும் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை.

தீர்வு கிடைக்குமா?

ஆனால் பெங்களூரு-நாகர்கோவில் இடையே எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்றும், சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்திலும் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்றும் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இதற்கான முயற்சிகளிலும் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக பெங்களூரு மத்திய தொகுதியின் பா.ஜனதா எம்.பி.யான பி.சி.மோகனை சந்தித்து கர்நாடக இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. காந்திநகா் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தினேஷ் குண்டுராவிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கொடுக்கும் அழுத்தம் மற்றும் அரசியல் தலைவர்கள் எடுக்கும் முயற்சிகள் மூலமாக சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்தே நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்பது பெங்களூருவில் வசிக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். என்றாலும், இதுபோன்ற ரெயில் மற்றும் தமிழக அரசு பஸ்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதன் மூலமாக பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருவது மட்டும் நிசர்தனமான உண்மை. ேமலும் தமிழக மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு தீர்வு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாதுகாப்பு இன்றி சாலைகளில் நிற்கும் தமிழக அரசு பஸ்கள்

மெஜஸ்டிக்கில் இருந்து சாந்திநகருக்கு தமிழக அரசு பஸ்கள் மாற்றப்பட்ட பின்பு, தமிழக அரசு பஸ்களை நிறுத்துவதற்காக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் எந்த ஒரு இடவசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுபற்றி தமிழக அரசு போக்குவரத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி கூறும் போது, பெங்களூரு சாந்திநகரில் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும், நமது பஸ்களை நிறுத்த பணிமனை எதையும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் ஒதுக்கி கொடுக்கவில்லை. இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக சாந்திநகரில் உள்ள சாலைகளின் இருபுறங்கள் தான் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த பஸ்களை பாதுகாப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. தமிழக உயர் அதிகாரிகள், கா்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசி பணிமனைக்கு ஏற்பாடு செய்தால், தமிழக பஸ்களும் பாதுகாப்பாக நிறுத்தலாம் என்றார்.

மெஜஸ்டிக்கில் ஆந்திர மாநில பஸ்கள்

பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து சாந்திநகருக்கு தமிழக பஸ்களும், அதுபோல், கேரள மாநில பஸ்களும் மாற்றப்பட்டு இருந்தது. ஆனால் மெஜஸ்டிக்கில் உள்ள கெம்பேகவுடா பஸ் நிலையத்தில் இருந்தே இன்றும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்திடம் பல முறை வற்புறுத்தியும் மெஜஸ்டிக்கில் இருந்து ஆந்திர பஸ்களை வேறு இடத்தில் இருந்து இயக்க முடியாது என்று அந்த மாநில போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்