கேரள சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய காவல்துறை..!
கேரள சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி காவல்துறை வெளியேற்றினர்.;
திருவனந்தபுரம்,
கேரள சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகம் எதிரே, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் போராட்டம் நடத்தினர்.
சபாநாயகரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். அவர்களை கலைந்துசெல்லும்படி பாதுகாவலர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து எம்எல்ஏக்களை பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். பாதுகாவலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் எம்எல்ஏக்கள் முரண்டு பிடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில எம்எல்ஏக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 4 எம்எல்ஏக்களுக்கு காயம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சதீசன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து சபையில் மறுக்கப்படுவதாகவும், அண்மையில் சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தை ஒத்திவைப்பு தீர்மானமாக முன்வைத்ததை சரியான காரணம் இன்றி சபாநாயகர் நிராகரித்துவிட்டார் என்றும் சதீசன் கூறினார்.
முதல்-மந்திரி பினராயி விஜயனின் அழுத்தத்தின் பேரில் சபாநாயகர் ஏ.என்.ஷம்ஷீர் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுகிறார். சட்டசபையில் கேள்விகளை எதிர்கொள்ள முதல்வர் பயப்படுகிறார், அதனால் தற்போதைய கூட்டத்தொடரை விரைவாக முடிக்க விரும்புகிறார் என்றும் சதீசன் தெரிவித்தார்.