ஆக்கிரமித்த அரசு நிலத்தை விவசாயிகளிடமே குத்தகைக்கு விடும் திட்டம் -மந்திரி ஆர்.அசோக் தகவல்

ஆக்கிரமித்த அரசு நிலத்தை விவசாயிகளிடமே குத்தகைக்கு விடும் வகையில் நிலவருவாய் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக மந்திரி ஆர்.அசோக் தெரிவித்தார்.;

Update: 2022-07-04 21:50 GMT

பெங்களூரு: ஆக்கிரமித்த அரசு நிலத்தை விவசாயிகளிடமே குத்தகைக்கு விடும் வகையில் நிலவருவாய் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக மந்திரி ஆர்.அசோக் தெரிவித்தார்.

மந்திரி ஆர்.அசோக் பேட்டி

கர்நாடக வருவாய்த் துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக விவசாயிகள் சிலர் வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை இவ்வாறு விவசாயிகள் ஆக்கிரமித்து பயிர்சாகுபடி செய்து வருகிறார்கள். இதில் அரசு சொத்துக்களை மீட்கும் வகையிலும், அதே வேளையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையிலும் இருக்க கர்நாடக அரசு, நில வருவாய் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

சட்ட திருத்த மசோதா

அதன்படி அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு அந்த நிலத்தை குத்தகை அடிப்படையில் பயிர் செய்ய வழங்க முடிவு செய்துள்ளோம்.

இந்த சட்ட திருத்த மசோதா ஒரு மாதத்திற்குள் கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். சிக்கமகளூரு மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர் நிலமும், ஹாசன் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலமும், குடகு மாவட்டத்தில் 9 ஆயிரம் ஏக்கர் நிலமும் விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பயிர்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த நிலத்தை அந்தந்த விவசாயிகளே குத்தகைக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.

6 லட்சம் ஏக்கர்

மேலும் கர்நாடகத்தில் 6 லட்சம் ஏக்கர் வனத்துறை நிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் சேவைக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

தட்சிணகன்னடா, குடகு மாவட்டங்களில் நிலநடுக்கமும், தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அங்கு தங்கியிருந்து ஆய்வு செய்ய உள்ளது. நானும் அந்த குழுவினருடன் அங்கு சென்று ஆய்வு பணியை நேரில் பார்வையிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்