காதலன் முகத்தில் வெந்நீர் ஊற்றிய நர்சு

திருமணத்துக்கு மறுத்ததால், காதலன் முகத்தில் வெந்நீர் ஊற்றிய நர்சை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-30 18:45 GMT

பெங்களூரு:-

கலபுரகியை சேர்ந்தவர்கள்

கர்நாடக மாநிலம் கலபுரகி டவுன் பகுதியை சேர்ந்தவர் விஜய்சங்கர் என்கிற விஜய்குமார்(வயது 30). இவர் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் தங்கி வேலை செய்து வருகிறார். இதேபோல் அப்சல்புரா தாலுகாவை சேர்ந்தவர் ஜோதி. இவரும் சாம்ராஜ்பேட்டையில் தங்கி, தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு ஆக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.ஜோதிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து அவர் தனது காதலனிடம் கூறாமல் இருந்தார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிக்கு திருமணம் முடிந்தது குறித்து விஜய்சங்கருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஜோதியை விட்டு, விஜய்சங்கர் விலக தொடங்கினார்.

திருமணத்துக்கு மறுப்பு

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி விஜய்சங்கரை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். எனினும், விஜய்சங்கர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இதுதொடர்பாக அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே விஜய்சங்கர், பொம்மச்சந்திராவில் உள்ள தனது நண்பரின் அறைக்கு சென்றார்.

இந்த நிலையில் நேரில் பேச வேண்டும் எனவும், தான் தங்கி இருக்கும் அறைக்கு வருமாறும் விஜய்சங்கரை ஜோதி அழைத்தார். விஜய்சங்கரும் அங்கு வந்தார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்வது தொடர்பாக பேசிகொண்டனர். அப்போது விஜய்சங்கர், திருமணம் செய்ய தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இரவில் 2 பேரும் தூங்குவதற்கு சென்றனர். இருப்பினும் தன்னை திருமணம் செய்ய மறுத்த விஜய்சங்கர் மீது ஜோதி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

வெந்நீர் ஊற்றிய பெண்

இந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த விஜய்சங்கர் மீது கொதிக்கும் வெந்நீரை ஜோதி ஊற்றி உள்ளார். இதில் அவரது முகம், மார்பு உள்ளிட்ட இடங்கள் வெந்து போனது. இருப்பினும் ஆத்திரம் தீராத ஜோதி, அவரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதற்கிடையே வலி தாங்க முடியாமல் விஜய்சங்கர் கத்தி கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர்.

அவர்கள் விஜய்சங்கரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள், சாம்ராஜ்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் விஜய்சங்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருமணத்திற்கு விஜய்சங்கர் மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜோதி, அவர் மீது வெந்நீரை ஊற்றியது தெரிந்தது.

வலைவீச்சு

இதுதொடர்பாக விஜய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜோதி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே ஜோதி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது நர்சு வெந்நீர் ஊற்றிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்