டெல்லியில் 7 வயது சிறுமியை தத்தெடுத்து சித்ரவதை செய்த செவிலியர்
பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் 18 இடங்களில் தீக்காயங்களும், தழும்புகளும் இருப்பது தெரியவந்தது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் காவல்நிலையத்திற்கு கடந்த 9-ந்தேதி, 7 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக புகார் வந்துள்ளது. சிறுமியின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து, அந்த சிறுமியின் பள்ளி ஆசிரியை போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் 18 இடங்களில் தீக்காயங்களும், தழும்புகளும் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
டெல்லி சப்தார்ஜங்க் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியாராக பணியாற்றி வரும் ரேணு குமாரி(வயது 50) என்பவர், தனது உறவினரின் 7 வயது மகளை தத்தெடுத்துள்ளார். தத்தெடுத்த முதல் நாளில் இருந்தே அந்த சிறுமியை ரேணு குமாரி அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் சிறுமியை படுக்க வைத்துள்ளார். சிறுமியின் உடலில் சூடு வைத்தும், நாக்கை கத்தியால் அறுத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். இவ்வாறு தினந்தோறும் சிறுமியை ரேணு குமாரி அடித்து துன்புறுத்தி வந்த நிலையில், அந்த சிறுமியின் உடலில் காயங்களும், தழும்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த காயங்களை அந்த சிறுமியின் பள்ளி ஆசிரியை கவனித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ரேணு குமாரி, அவரது கணவர் ஆனந்த் குமார் மற்றும் அவர்களது மகன் ஜானி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.