டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜி.எஸ்.டி.யா..? அப்படி ஒரு திட்டமே இல்லை: மத்திய மந்திரி விளக்கம்

தற்போது ஆட்டோமொபைல்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. மற்றும் வாகனங்களின் வகைக்கு ஏற்ப 1 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.;

Update:2023-09-12 15:05 IST

புதுடெல்லி:

வாகன புகையினால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. எனவே, காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டீசல் வாகனங்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி கூறியதாகவும், இதுதொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கடிதம் கொடுக்க உள்ளதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது.

டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்க மாநாட்டில் நிதின் கட்கரி பேசும்போது, 'டீசல் வாகனங்களுக்கு குட்பை சொல்லுங்கள். தயவு செய்து அவற்றை தயாரிப்பதை நிறுத்துங்கள். இல்லையெனில் வரியை அதிகப்படுத்துவோம். அப்போது, டீசல் கார்களை விற்பது கடினமாகிவிடும்' என்று எச்சரிக்கை விடுத்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தி வைரலாக பரவிய நிலையில், நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார். டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பது தொடர்பான எந்த முன்மொழிவும் தற்போது அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'2070ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்யமாக்கும் இலக்கை எட்டுவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை ஏற்றுக்கொள்வது அவசியம். இந்த எரிபொருட்கள் இறக்குமதியாகவும், செலவு குறைந்ததாகவும், உள்நாட்டு தயாரிப்பாகவும் மற்றும் மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும்' என்று கட்கரி கூறியுள்ளார்.

தற்போது ஆட்டோமொபைல்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. மற்றும் வாகனங்களின் வகைக்கு ஏற்ப 1 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. எஸ்யுவி எனப்படும் சொகுசு வாகனங்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி.யுடன் 22 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்