பீகாரில் சிகிச்சை பெற கிளினிக்கிற்கு வந்த குரங்கு; வைரலான வீடியோ
பீகாரில் காயத்திற்கு சிகிச்சை பெற குரங்கு ஒன்று கிளினிக்கை தேடி வந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
பாட்னா,
பீகாரில் சசராம் பகுதியில் ஷஜமா என்ற இடத்தில் கிளினிக் ஒன்று உள்ளது. இதில் அகமது என்பவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது கிளினிக்கை தேடி பெண் குரங்கு ஒன்று சென்றுள்ளது. அது நேராக நோயாளிகளுக்கான படுக்கையில் சென்று படுத்து கொண்டது.
இதனை கவனித்த அகமது முதலில் பயந்துள்ளார். அந்த பெண் குரங்கின் முகமும் மிரட்சியுடன் காணப்பட்டது. அதன்பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட டாக்டர், தைரியம் வரவழைத்து கொண்டு குரங்குக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார். காயத்திற்கு மருந்து போட்டுள்ளார்.
டெட்டானஸ் ஊசியும் போட்டுள்ளார். முகத்தில் களிம்பு பூசியும் விட்டுள்ளார். இது அனைத்தும் நடக்கும் வரை அந்த குரங்கு அமைதியாக படுக்கையில் ஓய்வாக இருந்துள்ளது.
இந்த தகவல் பற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் கிளினிக்கிற்கு வந்து குவிய தொடங்கி விட்டனர். சிகிச்சை பெற வந்த குரங்கை பார்த்து நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்கள்.
இதன்பின்பு சிகிச்சை பெற்ற அந்த குரங்கு செல்வதற்கு வசதியாக, திரண்டிருந்த கும்பலை வழி விடும்படி டாக்டர் அகமதுகூறியுள்ளார். அவர்கள் விலகி நின்றதும், குரங்கு வந்த வழியே திரும்பி சென்று அதன் வேலையை பார்க்க போய் விட்டது. கூட்டமும் கலைந்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது.