கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட்டவர்களின் வேட்புமனுக்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட்டவர்களின் வேட்புமனுக்களை ஏற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

Update: 2024-03-09 21:16 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதேபோல அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தில் அதன் கூட்டணி கட்சியினர் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

இந்நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சின்னத்தில் தாக்கல் செய்த வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றது செல்லாது என அறிவிக்கவும், தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 கட்சிகளை சேர்ந்தவர்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரியும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியலமைப்புச் சட்டம் 329-வது பிரிவின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் தேர்தலை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, எம்.எல்.ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை (திங்கட்கிழமை) விசாரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்