காதலிக்கு நீதி கோரி மந்த்ராலயாவின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்த நபர்
காதலிக்கு நீதி கோரி மராட்டிய தலைமை செயலகத்தின் 6-வது மாடியில் இருந்து நபர் ஒருவர் கீழே குதித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.;
புனே,
மராட்டியத்தில் பீட் நகரில் வசித்து வருபவர் பாபு நாராயண் மோகாசி (வயது 43). இவரது காதலி, கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பின் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின்னர், தனது காதலிக்கு நீதி கிடைப்பதற்கான சட்ட போராட்டத்தில் 4 ஆண்டுகளாக தொடர்ந்து மோகாசி ஈடுபட்டு வந்துள்ளார்.
எனினும், அதில் பலனில்லை. இந்த வழக்கில் போலீசார் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என அவர் குற்றச்சாட்டு எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை நேரில் சந்திக்க கடந்த வியாழ கிழமை மாலை 3 மணியளவில் மராட்டிய தலைமை செயலகம் அமைந்துள்ள மந்த்ராலயாவுக்கு சென்றுள்ளார்.
ஆனால், அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில், அவரால் ஷிண்டேவை சந்திக்க முடியவில்லை. இதனால், மனவருத்தமடைந்த அவர் நேராக தலைமை செயலக கட்டிடத்தின் 6-வது மாடிக்கு சென்றார். பின்பு, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
எனினும், பாதுகாப்பு வலை கட்டி அவரை கீழே இருந்தவர்கள் பிடித்தனர். அவர் கீழே குதித்ததில் முட்டி, மோதியதில் காயம் ஏற்பட்டு உள்ளது. போலீசார் சம்பவ பகுதியில் இருந்து அவரை மீட்டு உடனடியாக ஜி.டி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.