காட்டு பன்றிகள் தாக்கியதில் செத்தது, மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை...

சிகாரிபுராவில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை காட்டு பன்றிகள் தாக்கியதில் இறந்தது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-06-08 18:45 GMT

சிவமொக்கா,

சிறுத்தை அட்டகாசம்

சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகாவில் கவலி கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்திருப்பதால் சிறுத்தை, புலி, காட்டுபன்றி ஆகிய வன விலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்கின்றன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 4 வயது சிறுத்தை ஒன்று கிராமத்தில் உள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. குறிப்பாக இந்த சிறுத்தை வனப்பகுதியையொட்டி உள்ள கிராமத்திற்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடியதாக கூறப்படுகிறது.

இதனால் பீதியடைந்த கிராம மக்கள் இந்த சிறுத்தையை பிடிக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் அந்த சிறுத்தை கிராமத்திற்குள் நுழைந்தது. அப்போது கிராம மக்கள் அந்த சிறுத்தையை பிடிக்கவேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

காட்டு பன்றி தாக்கி சிறுத்தை சாவு

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அந்த கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை. வனப்பகுதியையொட்டிய புதர்களில் பதுங்கியிருந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் சிறுத்தை பதுங்கியிருந்த புதர்களை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த ஒரு புதரில், சிறுத்தை இறந்து கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்தது.

இதனால் பிற வன விலங்குகள் அந்த சிறுத்தையை தாக்கி கொன்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதை பார்த்த கிராம மக்கள் உடனே இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுத்தையை காட்டு பன்றிகள் ஒன்று சேர்ந்து தாக்கியதில் இறந்ததாக தெரியவந்தது. இந்த சம்பவம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. உயிருக்காக போராடி கொண்டிருந்த சிறுத்தை காப்பாற்ற ஆள் இல்லாமல் இறந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மக்கள் மகிழ்ச்சி

இந்த சிறுத்தை இறந்த தகவல் கிராம மக்களுக்கு தெரியவந்ததும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன், நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். அதே நேரம் இனி வரும் நாட்களில் சிறுத்தை, புலி, காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க நிரந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்