திரிவேணி சங்கமத்தில் கோலாகலமாக நடந்து முடிந்த கும்பமேளா

கே.ஆர்.பேட்டை திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

Update: 2022-10-16 18:45 GMT

மண்டியா:

திரிவேணி சங்கமம்

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா அம்பிகரஹள்ளி பகுதியில் உள்ள காவிரி, ஹேமாவதி, லட்சுமி தீர்த்தா நதிகள் இணையும் இடம் தான் திரிவேணி சங்கமம். இந்த திரிவேணி சங்கமத்தில் மலை மாதேஸ்வரர் கால் பதித்ததை நினைவு கூறும் வகையில் கோவில் கட்டப்பட்டது. அங்கு மலை மாதேஸ்வரர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு திரிவேணி சங்கமத்தில் முதல் கும்பமேளா நடந்தது.

இதையடுத்து 2-வது கும்பமேளா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மலை மாதேஸ்வரர் கோவிலில் இருந்து எடுத்து வந்த ஜோதிகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து 14-ந் தேதி மகா கும்பமேளா நடந்தது. 15-ந் தேதி மடாதிபதிகள் மாநாடு நடந்தது. 16-ந் தேதியான நேற்று மடாதிபதிகள் தலைமையிலான புனித நீராடல் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக மலை மாதேஸ்வரா கோவில்களில் 7 கலசங்களில் எடுத்து வரப்பட்ட புனி நீரை திரிவேணி சங்கமத்தில் ஊற்றி ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்த சுவாமி மற்றும் சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி உள்பட பலர் கலந்துகொண்டு பூஜை செய்தனர்.

புனித நீராடல்

பின்னர் மடாதிபதிகள் புனித நீராடினர். இதை தொடர்ந்து பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. இறுதி நாளான நேற்று காலை தொடங்கி இரவு வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் பல்வேறு காரணங்களால் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புனித நீராடல் நிகழ்ச்சியை மடாதிபதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்து நீராடினார். பின்னர் சிறப்புரை ஆற்றினார். மேலும் மண்டியா உள்பட வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடினர். இதைதொடர்ந்து திரிவேணி சங்கமம் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்