மந்திரிசபையில் ஆதிக்கம் செலுத்தும் ஜார்கிகோளி சகோதரர்கள்

மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மந்திரிசபையில் ஜார்கிகோளி சகோதரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Update: 2023-05-20 20:37 GMT

பெங்களூரு:-

சதீஸ் ஜார்கிகோளி மந்திரி

கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி நேற்று ஆட்சி அமைத்தது. புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா, துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்று இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் செயல் தலைவரும், பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சதீஸ் ஜார்கிகோளி மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டு இருந்தார். அதாவது சதீஸ் ஜார்கிகோளி மந்திரியாக பதவி ஏற்பது 4 முறையாகும்.

4 முறை அவர் எமகனமரடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது, அந்த 4 முறையும் அவர் மந்திரி பதவி வகித்துள்ளார். கடந்த 2004-05-ம் ஆண்டில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் ஜவுளித்துறை மந்திரியாக சதீஸ் ஜார்கிகோளி இருந்தார். அதன்பிறகு, 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சித்தராமையா ஆட்சியில் கலால்துறை மற்றும் சிறிய தொழில்துறை மந்திரியாக சதீஸ் ஜார்கிகோளி இருந்தார்.

சகோதரர்கள் ஆதிக்கம்

கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் வனத்துறை மந்திரியாக சதீஸ் ஜார்கிகோளி இருந்தார். தற்போது 4-வது முறையாக அவர் மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஜார்கிகோளி சகோதரர்கள் குடும்பத்தில் ஒருவர் மந்திரியாக இருப்பது தொடர்ந்து வருகிறது. தற்போது கூட 8 பேருக்குதான் மந்திரி பதவி கிடைத்துள்ளது. ஏராளமான மூத்த தலைவர்கள் மந்திரி பதவிக்காக காத்திருக்கும் போது நேற்று சதீஸ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி கிடைத்திருந்தது.

கடந்த பா.ஜனதா ஆட்சியில் சதீஸ் ஜார்கிகோளியின் சகோதரர் ரமேஷ் ஜார்கிகோளி நீர்ப்பாசனத்துறை மந்திரியாகவும், அவரது மற்றொரு சகோதரர் பாலசந்திர ஜார்கிகோளி கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவராக பதவியில் இருந்தார். குறிப்பாக பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த இந்த சகோதரர்கள் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும், ஜார்கிகோளி சகோதரர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்