நாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) தனித்து போட்டி; தேவேகவுடா அறிவிப்பு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) தனித்து போட்டியிடும் என்று தேவேகவுடா அறிவித்துள்ளார்.;
பெங்களூரு:
முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டோம். தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி தனித்து போட்டியிடும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்துவோம். ஜனதா தளம் (எஸ்) கட்சி அவ்வளவு தான் அழிந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் யாராலும் எங்கள் கட்சியை ஒழிக்க முடியாது.
மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அரசு நடைபெற்றபோது, அவரது அரசுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி எங்கள் கட்சியின் 3 எம்.பி.க்களின் ஆதரவை வழங்கினோம். அதனால் சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் முடிவு செய்வோம். அதனால் கட்சி தொண்டர்கள் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. தேசிய கட்சியாக உள்ள காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறதா?.
பிரச்சினை அடிப்படையில் சட்டசபை கூட்டத்தில் பா.ஜனதாவுடன் இணைந்து குமாரசாமி செயல்பட்டு இருக்கலாம். இதற்கு முன்பு நாங்கள் காங்கிரசுடன் சேர்ந்து போராடவில்லையா?. குமாரசாமி எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் என்று சிலர் கட்டுக்கதையை கூறினர். பா.ஜனதாவில் நடைபெறும் விஷயங்கள் பற்றி நாங்கள் பேச மாட்டோம்.
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு என்னை அழைக்க வேண்டாம் என்று கர்நாடக காங்கிரசில் உள்ள அணியினர் கூறினர். ஒருவேளை என்னை அழைத்தால் இந்த கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். அதனால் தான் என்னை அழைக்கவில்லை. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் எனது நண்பர் இல்லையா?.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கலாம். ஆனால் மராட்டியத்தில் அவரது கட்சி பா.ஜனதா அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையா?. பா.ஜனதாவுடன் சேர்ந்து குமாரசாமி முதல்-மந்திரி ஆனதாக காங்கிரசார் குறை சொல்கிறார்கள். 1983-ம் ஆண்டு பா.ஜனதா ஆதரவுடன் ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரி ஆகவில்லையா?. நான் அப்போது பொதுப்பணித்துறை மந்திரியாக பணியாற்றினேன்.
அந்த நேரத்தில் தற்போதைய முதல்-மந்திரி சித்தராமையா கன்னட காவல் குழு தலைவராக பணியாற்றவில்லையா?. நைஸ் நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து சட்டசபை கூட்டுக் குழு விசாரணை நடத்தி அறிக்கை வழங்கியுள்ளது. அந்த அறிக்கை மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?. அந்த நிறுவனத்திடம் கூடுதலாக 11 ஆயிரத்து 660 ஏக்கர் நிலம் உள்ளது.
அது யாருடைய நிலம். அந்த நிறுவனத்தின் மீது சித்தராமையா நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?. அதிகாரத்தை கைப்பற்ற மண்டியாவில் பா.ஜனதாவுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளது. நாங்கள் கொள்கை பற்றாளர்கள் என்று சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களின் கொள்கை எங்கே போனது?. கர்நாடக மேல்-சபை தேர்தலில் பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் வக்கீல்கள் அணி தலைவர் ரங்கநாத் போட்டியிடுவார்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.