பணம் கட்டி விட்டு இறந்த உடலை எடுத்து செல்ல கூறிய மருத்துவமனை; உயிருடன் எழுந்த நபரால் பரபரப்பு
பஞ்சாப்பில், பணம் கட்டி விட்டு இறந்த உடலை எடுத்து செல்ல தனியார் மருத்துவமனை கூறிய நிலையில், அந்நபரின் கால் லேசாக ஆடியுள்ளது.;
ஹோசியார்பூர்,
பஞ்சாப்பில் ஹோசியார்பூர் மாவட்டத்தில் ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பகதூர் சிங்.
இவருக்கு இருமல் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளார். இதனால், பகதூர் சிங்கை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஹோசியார்பூரில் உள்ள ஐ.வி.ஒய். என்ற பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து உள்ளனர்.
உடனடியாக அவரை ஐ.சி.யூ.வில் சேர்க்கும்படி டாக்டர்கள் கூறி விட்டனர். டாக்டர்களின் மூன்று, நான்கு மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் பகதூர் சிங் உயிரிழந்து விட்டார் என மருத்துவமனை கூறியுள்ளது. அதற்கான தொகையை கட்டி விட்டு, இறந்த உடலை எடுத்து செல்லும்படி அவரது குடும்பத்தினரிடம் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
பகதூர் உடல் அருகே சென்றபோது, உடலில் லேசான இயக்கம் காணப்பட்டு உள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் சிங்கை தூக்கி கொண்டு பி.ஜி.ஐ. மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்து உள்ளனர். இதில் சிங்குக்கு சில மணிநேரத்திற்கு பின்னர் சுயநினைவு திரும்பி உள்ளது.
இதனை தொடர்ந்து, பகதூரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பகதூர் சிங்கும் கலந்து கொண்டார்.