டி.கே.சிவக்குமார் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெங்களூரு, மே.3-
ஹெலிகாப்டரில் டி.கே.சிவக்குமார் பயணம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்திற்காக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போது அவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் நேற்று காலை பெங்களூரு ஜக்கூர் விமானப்படை தளத்தில் இருந்து கோலார் மாவட்டம் முல்பாகல் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.
பறவை மோதி கண்ணாடி உடைந்தது
அந்த சமயத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபடி டி.கே.சிவக்குமார் ஒரு கன்னட செய்தி சேனல் நிருபருக்கு பேட்டி அளித்தபடி இருந்துள்ளார். அந்த சமயத்தில் தான் கழுகு ஹெலிகாப்டரின் கண்ணாடி மீது மோதியதும், இதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி, கண்ணாடி சிதறல்கள் டி.கே.சிவக்குமார், நிருபர் மீது தெறித்து விழுந்தது. இதில் நிருபர் லேசான காயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தால் தொடர்ந்து ஹெலிகாப்டரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த ஹெலிகாப்டரை எச்.ஏ.எல். விமான நிலையத்தில் அவசரம் அவசரமாக தரையிறக்கினார்.
உயிர் தப்பினர்
இதனால் அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் ஏற்படவில்லை. மேலும் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த டி.கே.சிவக்குமார் உள்பட அனைவரும் உயிர்தப்பினர்.
இதற்கிடையே ஹெலிகாப்டரில் பறவை மோதி கண்ணாடிகள் உடைந்து சிதறும் வீடிேயா காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடவுளின் அருளால்...
இதுகுறித்து டி.கே.சிவக்குமார், "அப்போது நான் பேட்டி கொடுத்திருந்தேன். ஒரு பெரிய கழுகு மோதியது. இதனால் கண்ணாடி உடைந்தது. விமானி நிதானமாக ஹெலிகாப்டரை இயக்கி வந்து பத்திரமாக தரை இறக்கினார். நான் நம்பும் கடவுளின் அருளால் நான் பாதுகாப்பாக உள்ளேன். நான் சாலை மார்க்கமாக முல்பாகிலுக்கு செல்கிறேன்" என்றார்.