காபித்தோட்ட அதிபரை உடனே கைது செய்ய வேண்டும்; தலித் அமைப்பினர் கோரிக்கை
வேலைக்கு தாமதமாக வந்த தொழிலாளியை தாக்கிய காபித்தோட்ட அதிபரை உடனே கைது செய்ய வேண்டும் என தலித் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் காந்தராஜ். காபித்தோட்ட அதிபர். இவரது தோட்டத்தில் எல்லப்பா என்ற தலித் தொழிலாளி கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வேலைக்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காந்தராஜ், எல்லப்பாவை சரமாரியாக திட்டி, அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தரிகெரே போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தலித் அமைப்பினர் நேற்று சிக்கமகளூரு டவுனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள், காபித்தோட்ட அதிபர் காந்தராஜை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.