கர்நாடகத்தில் புத்தொழில்களை நிதி உதவி வழங்கி அரசு ஊக்குவிக்கிறது- மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

கர்நாடகத்தில் புத்தொழில்களை நிதி உதவி வழங்கி அரசு ஊக்குவிக்கிறது என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-25 16:50 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் புத்தொழில்களை அரசு நிதி உதவி வழங்கி ஊக்குவிக்கிறது என்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.

நவீன தொழில்நுட்பங்கள்

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 18-ம் ஆண்டு புத்தாக்க மாநாடு தொடக்க விழா பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்கேற்ப கொள்கைகளை நாங்கள் வகுத்து அமல்படுத்தியுள்ளோம். புத்தொழில்களை (ஸ்டார்ட்அப்) தொடங்க அரசு நிதி உதவி வழங்கி ஊக்குவிக்கிறது. அவ்வாறு நிதி உதவி வழங்கும் ஒரே மாநிலம் கர்நாடகம் தான். குவாண்டம், 'கைதக' போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இன்று உலகை ஆளுகின்றன.

துணை திட்டங்கள்

அதனால் தான் நாங்கள் என்ஜினீயரிங் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கொள்கையை கொண்டு வந்துள்ளோம். உயர்கல்வித்துறையை நாங்கள் உலக தரத்தில் மேம்படுத்தி அதை தொழில்துறையுடன் இணைத்துள்ளோம். இவற்றின் சீா்திருத்தத்திற்கு தொழில்நுட்பத்தை தீவிரமாக பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உலக தரத்தில் என்ஜினீயரிங் கல்லூரி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'சூப்பர்-30' என்ற திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம். தொழில்துறையின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அதற்கேற்ப துணை திட்டங்களை நாங்கள் தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த பணிகள் இன்னும் வேகத்தில் நடைபெற வேண்டும். கர்நாடகத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் கர்நாடக பொருளாதாரத்திற்கு ரூ.23 லட்சம் கோடி பங்களிப்பு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த 3 ஆண்டுகளில் நமது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் ரூ.80 லட்சம் கோடியை எட்டும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்