விளையாட்டுத்துறைக்கு அரசு அதிக ஊக்கம் அளிக்கிறது-மந்திரி நாராயணகவுடா
விளையாட்டுத்துறைக்கு அரசு அதிக ஊக்கம் அளிக்கிறது என்று மந்திரி நாராயணகவுடா தெரிவித்துள்ளார்
பெங்களூரு: கர்நாடக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் மினி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டிகள் நிறைவு விழா நேற்று பெங்களூரு கன்டீரவா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மத்திய அரசு சார்பில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அதைத்தொடர்ந்து இந்த மினி ஒலிம்பிக் போட்டியையும் வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். இந்த போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமியர்கள் கலந்து கொண்டனர். ஆக்கி, கூடைப்பந்து, பூப்பந்து, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 21 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 171 போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு 550 பதக்கங்கள் வழங்கப்பட்டன. வரும் நாட்களில் பெரிய அளவில் சாதனை படைக்க இந்த போட்டிகள் வீரர்களுக்கு உதவும். விளையாட்டுத்துறைக்கு கர்நாடக அரசு அதிக ஊக்கம் அளிக்கிறது. ஒலிம்பிக் போட்டியிலும் நமது குழந்தைகள் சாதனை படைக்க வேண்டும். இதன் மூலம் கர்நாடகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு நாராயணகவுடா பேசினார்.