கல்யாண கர்நாடக பிரிவில் முதலிடம் பிடித்த பெண் கைது

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கல்யாண கர்நாடக பிரிவில் முதல் இடம் பிடித்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-11-03 21:22 GMT

கலபுரகி:-

தேர்வு முறைகேடு வழக்கு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், பா.ஜனதா பெண் பிரமுகர் திவ்யா, முறைகேடு செய்து தேர்வு எழுதியவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் கூட கலபுரகி கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தனர். இந்த தேர்வை எழுதிய 545 பேரின் வினாத்தாள்களும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு

உள்ளது. இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கல்யாண கர்நாடக பிரிவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்று இருந்த சுப்ரியா மல்லிகார்ஜுன் ஹிண்டேகர் (வயது 26) என்பவரின் வினாத்தாள்களில் குளறுபடி இருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது.

பெண் தேர்வர் கைது

இதையடுத்து சுப்ரியா மல்லிகார்ஜுன் வசித்து வந்த கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தாலுகா ஹிப்பரகா என்ற கிராமத்திற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவரை சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் தேர்வு எழுதும்போது புளூடூத்தை பயன்படுத்தியதாகவும், தேர்வில் வெற்றி பெறுவதற்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறினார். இதை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்ட போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக முதல் தாளில் 50 மதிப்பெண்ணுக்கு 24 மதிப்பெண்கள் பெற்ற சுப்ரியா, 2-வது தாளில் 150-க்கு 131 மதிப்பெண் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்