விமானத்தில் சிகரெட் புகைத்த இளம்பெண்
கொல்கத்தாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் இளம்பெண் ஒருவர் சிகரெட் புகைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.;
பெங்களூரு:-
கொல்கத்தாவில்...
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவர், சிகரெட் புகைத்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிரியங்கா(வயது 24). இவர் மார்ச் 5-ந் தேதி
கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்த பெங்களூருவுக்கு புறப்பட்டார். இதற்காக அவர் இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்து இருந்தார். அதன்படி அவர் விமானத்தில் ஏறி தனது பயணத்தை தொடங்கினார்.
விமானத்தில் புகை
அந்த விமானம் பெங்களூருவுக்கு வருகை தருவதற்கு அரை மணி நேரம் முன்பு, அதில் பயணித்த பிரியங்கா, விமான கழிவறைக்கு சென்றார். அவர் அங்கு வைத்து சிகரெட் புகைத்துள்ளார். பின்னர், அந்த சிகரெட்டை அணைக்காமல் அவர் தரையில் போட்டுவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினார். சிகரெட் புகை நெடி வருவதை கண்டதும், விமான பணிப்பெண் கழிவறைக்கு சென்று பார்த்தார்.
அப்போது முழுமையாக அணைக்கப்படாத நிலையில் சிகரெட் ஒன்று கிடந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்டு அதை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதையடுத்து அவர் பெங்களூரு விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விமான நிலைய போலீசார், தயாராக இருந்தனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
இந்த நிலையில் அந்த விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது. இதையடுத்து அங்கு நின்ற போலீசார், இளம்பெண்ணை கைது செய்தனர். அவர் மீது பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் திறமைகள், சாதனைகள் பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் விமானத்தில் சிகரெட் புகைத்ததால் இளம்பெண் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.