நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் கழுத்தை நெரித்துக்கொலை; காதல் கணவர், தந்தை கைது
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்று கல்லை கட்டி உடலை ஆற்றில் வீசிய காதல் கணவரும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அந்த பெண்ணின் தந்தையும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
மண்டியா:
யு-டியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்து வருகிறது. திறமைக்கான தளமாக இருந்தாலும் சில சமயங்களில் புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ரீல்ஸ் செய்பவர்களின் உயிரை காவு வாங்கி விடுகிறது. சமீபத்தில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்த சரத்குமார் என்ற வாலிபர் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா அரசினகுந்தே நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளத்தின் போது செல்பி எடுக்க முயன்றதால் உயிரிழந்தார்.
இது ஒருவகை என்றால், ரீல்ஸ் வீடியோ மீதான மோகத்தால் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா மண்டியாகொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 33). இவரது மனைவி பூஜா (26). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
இந்த நிலையில் பூஜா டிக்டாக் செயலியில் வீடியோ பதிவிட்டு பிரபலமானார். தற்போது அவர் ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அத்துடன் அவர் சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துள்ளது. ஆனால் பூஜாவின் நடவடிக்கை பிடிக்காத ஸ்ரீநாத் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் பூஜா அதை பொருட்படுத்தாமல் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்ததுடன், செல்போனில் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார்.
இதனால் பூஜாவின் நடத்தையில் ஸ்ரீநாத்துக்கு சந்தேகம் எழுந்தது. எனவே அவர் மனைவி பூஜாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இருப்பினும் ரீல்ஸ் வீடியோவால் தனக்கு கிடைத்த புகழை கைவிட முடியாததால் வீடியோ பதிவிடுவதையும், செல்போனில் பேசுவதையும் பூஜா தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளார். இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபத்தின் உச்சிக்கே சென்ற ஸ்ரீநாத், காதல் மனைவி என்று கூட பாராமல் பூஜாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் நடந்த சம்பவம் பற்றி தனது மாமனாரான பூஜாவின் தந்தையான ராஜசேகர் (53) என்பவருக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் போலீசில் தெரியாமல் இருக்க கொலையான பூஜாவின் உடலை காவிரி ஆற்றில் வீச திட்டமிட்டனர்.
அதன்படி இருவரும் பூஜாவின் உடலை சாக்குப்பையில் கட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு அந்தப் பகுதியில் ஓடும் காவிரி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். பின்னர் பூஜாவின் உடல் மீது பெரிய கல்லை கட்டி, காவிரி ஆற்றில் வீசியுள்ளனர். அதன்பிறகு இருவரும் எதுவும் நடக்காதது போல் அவரவர் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ராஜசேகர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பெற்ற மகளை மருமகன் கொன்றுவிட்டாரே என்ற கவலையும், கோபமும் கொஞ்சம் கூட இல்லாமல் ஓட்டல் வேலைக்கு சென்றுள்ளார். அதுபோல் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை கொன்றுவிட்டோமோ என்ற குற்ற உணர்வு இல்லாமல் 3 நாட்களாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள நிமிஷாம்பா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் போலீசாரின் அவசர உதவி எண்-112-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை கொலை செய்து விட்டதாகவும், பின்னர் மாமனார் ராஜசேகருடன் சேர்ந்து பூஜா உடலை ஆற்றில் வீசி விட்டதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
அதன்பிறகு தான் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து அரகெரே போலீசார், ஸ்ரீநாத்தை கைது செய்தனர். மேலும் கொலையை மறைக்க முயன்றதுடன், உடந்தையாக இருந்ததாக ராஜசேகரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை கணவரே கொன்று, மாமனாருடன் சேர்ந்து உடலை ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.