ஜி20 நாடுகள் சபை மின்சார வினியோக குழுவின் முதல் கூட்டம்

ஜி20 நாடுகள் சபையின் மின்சார வினியோக குழுவின் முதல் கூட்டம் பெங்களூருவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.;

Update: 2023-02-04 21:46 GMT

பெங்களூரு:-

மாற்று வினியோக தொடர்புகள்

ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு(2024) இந்தியாவில் நடக்கிறது. இந்த சபையில் அர்ஜென்டினா, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஐரோப்பிய நாடுகள், பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் சபைக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. இந்த உச்சி மாநாட்டையொட்டி டெல்லி உள்பட நாட்டின் பல மாநிலங்களில், பல்வேறு துறை தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடக்கின்றன. கர்நாடகத்தில் ஏற்கனவே நிதி தொடர்பான கூட்டம் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஜி20 நாடுகள் சபை பிரதிநிதிகளின் 2-வது கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இது 'மின்சார வினியோக செயற்குழு'வின் முதல் கூட்டம் ஆகும். இதில் மின்சார பாதுகாப்பு, மாற்று வினியோக தொடர்புகள், மின்சாரத்தை பொறுப்பான முறையில் பயன்படுத்துவது, எதிர்காலத்திற்காக மின்சாரம் போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

சிவப்பு கம்பள வரவேற்பு

இதில் பல்வேறு ஒப்பந்தங்களும் போடப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் இந்தியா உள்பட 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அத்துடன் 9 நாடுகளின் பிரதிநிதிகள் விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் இன்று தொடங்கி வருகிற 7-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த 35 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு கர்நாடகத்தின் கலாசாரம், பண்பாடு, சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த பணிகளை சுற்றுலாத்துறையின் இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:-

சுற்றுலா தலங்கள்

வெளிநாட்டு பிரதிநிதிகள் கா்நாடகத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு கர்நாடகத்தின் கலாசாரம், சுற்றுலா தலங்கள் குறித்து எடுத்து கூறுகிறோம். இது 'கர்நாடக பிராண்டு' குறித்து மட்டுமின்றி நமது மாநிலத்தின் புகழை உலக அளவில் கொண்டு செல்ல உதவுகிறது. அந்த பிரதிநிதிகள் நமது கலாசாரம், பண்பாடு குறித்து அறிந்து கொள்கிறார்கள். மேலும் கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதற்கு தேவையான சூழல்கள் குறித்தும் அவர்களுக்கு நாங்கள் எடுத்து கூறுகிறோம். மேலும் அவர்களை பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்லவும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூருவுக்கு வருகை தந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு சர்வதேச விமான நிலையத்தில் மேளதாளம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இந்த கூட்டம் நடைபெறும் ஓட்டலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

...........

Tags:    

மேலும் செய்திகள்