அரிவாளால் வெட்டி தந்தை கொலை; நாடகமாடிய 16 வயது சிறுவன் கைது

மைசூருவில், குடும்பத்தகராறில் அரிவாளால் வெட்டி தந்தையை கொன்று நாடகமாடிய 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.;

Update: 2022-08-09 16:57 GMT

மைசூரு: மைசூருவில், குடும்பத்தகராறில் அரிவாளால் வெட்டி தந்தையை கொன்று நாடகமாடிய 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் பற்றி மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா தெரிவித்ததாவது:-

வியாபாரி கொலை

மைசூரு டவுன் பிருந்தாவன் படாவனே பகுதியில் வசித்து வந்தவர் சம்பத் குமார்(வயது 60). இவரது மனைவி காயத்ரி. இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சம்பத்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முகரம் பண்டிகையையொட்டி காயத்ரியும், அவரது மகனும் வீட்டில் இருந்தனர். வியாபார விஷயமாக சம்பத்குமார் வெளியே சென்றிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் காயத்ரி வெளியே சென்றுவிட வீட்டில் அவரது மகன் மட்டும் தனியாக இருந்தான். இதையடுத்து மகனை பார்ப்பதற்காக சம்பத்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது சம்பத்குமாருக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மகன், தந்தை என்றும் பாராமல் சம்பத் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சம்பத்குமார் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மேட்டுகள்ளி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையான சம்பத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகன் கைது

போலீசார், சம்பத்குமாரின் மகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவன், தந்தை சம்பத்குமாரை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அரிவாளால் வெட்டிகொன்றுவிட்டு தப்பி சென்றுவிட்டதாக தெரிவித்தான். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். ஆனால் சம்பத்குமாரின் வீட்டிற்குள் மர்ம நபர் யாரும் வந்து சென்றது பதிவாகவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார், சம்பத்குமாரின் மகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவன், தந்தை சம்பத்குமாரை கொன்றதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவனை, போலீசார் கைது செய்தனர்.

தாயுடன் தகராறு செய்ததால்...

விசாரணையில் சம்பத்குமார், மனைவி காயத்ரியிடம் தினமும் தகராறு செய்து அவரை அடித்து-உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகன், சம்பத்குமாரை தீர்த்து கட்டியது தெரியவந்தது. கைதான சிறுவனை, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்