சந்திரயான் -3 : ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் காத்திருக்கிறது - அரவிந்த் கெஜ்ரிவால்

நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2023-08-22 08:07 GMT

புதுடெல்லி,

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை மாலை நிலவில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்து கணினிகளும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், சந்திரயான் 3 செயல்பாடு திருப்திகரமாக உள்ளது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

எனவே, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை நாளை மாலை 5.20 மணி முதல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், நிலவில் இருந்து 70 கி.மீ உயரத்தில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டர் எடுத்துள்ள இந்த புதிய புகைப்படங்கள் தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும். இதனிடையே, சாதகமான சூழல் இல்லாவிட்டால் சந்திரயான் -3 தரையிறங்குவது ஆக.27க்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், திட்டமிட்டபடி நாளை மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்தநிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை மாலை நிலவில் தரையிறங்கும் நிகழ்வு குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

"சந்திரயான்-3 நாளை தரையிறங்குவது நாட்டுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். அது வெற்றிகரமாக தரையிறங்க இறைவனை பிரார்த்திக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் காத்திருக்கிறது என்றார்.

சந்திரயான்-3 தரையிறக்கம் நிச்சயம் வெற்றி பெறும் என்று இந்திய வானியற்பியல் கழகத்தின் இயக்குநர் அன்னபூரணி சுப்ரமணியம் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்